(119) ரஜினிக்கு ரெட்!
"நடிகர்கள் சம்பளத்தை குறைக்கவேண்டும்' என்கிற கோரிக்கையோடு, சென்னை -செங்கை -காஞ்சிபுரம் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் சிந்தாமணி முருகேசன் அண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில்... தன்னை டார்கெட்பண்ணி, கடுமையாகப் பேசுவதாக உணர்ந்த ரஜினி சார் ""நான் சம்பளத்தை குறைச்சுக்கிறேன்'' எனச் சொல்லிவிட்டு கூட்டத்திலிருந்து கிளம்பிவிட்டார். நானும் வாக்-அவுட் செய்துவிட்டு, பெஃப்சி தலைவர் மோகன் காந்திராமன் சாரையும் அழைத்துக்கொண்டு ரஜினி சாரின் வீட்டுக்கு வந்தோம். என்னைப் பார்த்ததும் கண்கலங்கிய ரஜினி சார்... ""வேணாம் ரவி... எனக்கு சினிமாவே வேணாம். என்னை டார்கெட் பண்ணிப் பேசுறாங்க. கூட்டத்துலருந்து நான் வெளியேறின பிறகு என்னை எப்படி பேசினாங்கனு உங்களுக்குத் தெரியும். நீங்களும் வெளியேறி வந்தபிறகு... ரொம்ப மோசமா பேசியிருக்காங்க. கூட்டத்துல இருந்த ஒரு நண்பர் என்கிட்ட போன்ல சொன்னார்'' எனச் சொல்லி வேதனைப்பட்டார்.
அந்த கூட்டத்தில் ரஜினி நடிப்பதற்கு "ரெட்' போடப்பட்டது.
""சார்... கவலைப்படாதீங்க. ஒரு நல்ல முடிவை எடுப்போம்'' எனச் சொல்லிவிட்டு வந்தேன்.
இந்த "ரெட்' பிரச்சினையால் "உழைப்பாளி' பட வேலைகள் தொடங்குவது தடைப்பட்டது.
பெஃப்சி உள்ளிட்ட அமைப்புகளைத் திரட்டி நடிகர் சங்கம் சார்பில் ரஜினி சாருக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடத்தினேன்.
""ரஜினி சார் நடிக்க அவங்க தடை போட்டிருக்காங்க. இது எப்படி சரியாகும். அவங்களுக்கு பதிலடியா நாம... ஸ்டிரைக் பண்ணலாம்'' என்றேன்.
எப்போதுமே பெஃப்சி நிர்வாகிகளாக வரும் எல்லோருமே புத்திசாலிகள்.
""நடிகர்சங்கத் தலைவராக ராதாரவியண்ணன் நம்ம பெஃப்சி அமைப்பிற்கு நல்ல ஒத்துழைப்பு தந்துக்கிட்டிருக்கார். அதை நாங்க மறக்கல... மறுக்கல... ஆனா, ரஜினி ஒருத்தருக்காக சினிமா ஸ்டிரைக்கா?'' எனக் கேட்டனர் பெஃப்சி நிர்வாகிகள்.
""நான் நடிகர்சங்கத் தலைவராக இப்போது பேசவில்லை. பெஃப்சி அமைப்பில் அங்கம் வகிக்கிற டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவரா பேசுறேன். பெஃப்சி அமைப்பின் உபதலைவர் என்ற முறையில்'' என்றேன்.
பெஃப்சி என்றால் என்ன? என்பதை அருமையாக விளக்கி "ஸ்டிரைக் வேண்டாம்' என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள். அதிலிருந்த நியாயம் எனக்குப் பிடித்தது.
ஆனாலும் சும்மா விட்டுவிட முடியாதே...
நடிகர்சங்க செயற்குழு கூட்டத்தைக் கூட்டி சிந்தாமணி முருகேசன் அண்ணனுக்கு எதிராக சில முடிவுகளை எடுக்க திட்டமிட்டேன்.
இதற்காக நடிகர்கள் எல்லோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம்.
ரஜினி சாரையும் சந்தித்து அழைத்தபோது... ""கமல் வந்தா நல்லா இருக்கும்'' என்றார்.
""நான் கமல் சார்கூட பேசிக்கிறதில்ல. நீங்க போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லுங்க. நான் அவரைப் போய் பார்க்கிறேன்'' என்றேன்.
""நான் கமல்கிட்ட பேசிட்டேன்'' என்றார்.
மோகன் ஸ்டுடியோவில் "மகராசன்' படப்பிடிப்பில் இருந்தார் கமல் சார்.
கமல் சாரை சந்திப்பதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால்... "மகராசன்' படப்பிடிப்பு தளத்திற்குள் போவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது.
அதற்குக் காரணம்...
""டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் கஷ்டத்தில் இருப்பதால் அவருக்கு உதவ... கமல் உட்பட பலரும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த படம் "மகராசன்'.
என்னையும் நடிக்கக் கேட்டார்கள்.
நான் ரங்கராஜன் அவர்களின் வீட்டிற்கே சென்று... ""நான் "மகராசன்' படத்துல நடிக்கமாட்டேன்'' என அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
நான் இப்படிச் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
"கரையெல்லாம் செண்பகப்பூ' படத்திற்கு என்னைத் தேர்வு செய்த ரங்கராஜன் அவர்கள்.. பிறகு என்னை நிராகரித்துவிட்டு, பிரதாப்போத்தன் அவர்களை தேர்வு செய்தார்.
""தமிழ் படத்துல நடிக்க தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புத் தரமாட்டீங்களா?'' என சண்டை போட்டுவிட்டு வந்தேன்.
இருந்தாலும் "ரஜினி சாருக்கு தடை போட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தானே... கமல் சாரை சந்திக்கிறோம்' என சமாதானப்படுத்திக்கொண்டு செட்டில் கமல் சாரை சந்தித்தேன்.
""நடிகர் சங்கத்துல நடக்கப்போற கூட்டத்துல கலந்துக்கணும்னு ரஜினி கேட்டுக்கொண்டார். நான் வர்றேன்'' என்றார் கமல் சார்.
""இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கும் வரணும். மறுநாள் நடக்கப்போற கண்டன தீர்மானம் நிறைவேற்றுகிற கூட்டத்துக்கும் வரணும்'' என்றேன்.
சம்மதித்தார்.
ஒருவர் கூட்டத்துக்கு வருவதும், வராததும் அவருடைய விருப்பம். ஆனால் வருவதாகச் சொல்பவர் முழுமனதோடு சொல்கிறாரா? இல்லை... அரை மனதோடு சொல்கிறாரா? என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியும்.
இந்த கூட்டம் சம்பந்தமாக கமல் சாரிடம் ஈர்ப்பு எதுவும் இல்லை.
நடிகர் சங்கத்தில் விநியோகஸ்தர்களின் தீர்மானத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது? என்கிற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பெரிய ஹீரோக்கள் பலரும் பேசினர். எல்லோருமே சிந்தாமணி முருகேசன் அண்ணனுக்கு எதிராகப் பேச அச்சப்பட்டது தெரிந்தது.
கமல் சாரும் ஒரு கருத்தைப் பேசிவிட்டு... ""இந்த கருத்தை பத்திரிகையாளர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டுத்தான் வந்தேன்'' என்றார்.
கூட்டம் முடிந்ததும்...
""எந்த கருத்தா இருந்தாலும் அதை கூட்டத்துல பேசி, ஆலோசிச்சு... அப்புறம்தான் பேப்பருக்கு நியூஸ் போகணும். பேப்பர்ல சொன்ன கருத்தை இங்க பேசுறதா கமல் சொல்றாரே'' என வருத்தப்பட்டார் விஜயகாந்த்.
நான் விஜிமாவை சமாதானப்படுத்தினேன்.
மறுநாள் கண்டன தீர்மானக் கூட்டம் நடிகர் சங்கத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்திலும்... ""பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு வந்த கருத்தைத்தான் இங்கே சொல்கிறேன்'' என கமல் சார் பேசிவிட்டுக் கிளம்ப... ""கமல் சார் இப்படி பண்ணினா என்ன அர்த்தம்?'' என விஜிமா டென்ஷனானார்.
""இல்ல விஜிமா... நாம ரஜினி சாருக்கு சப்போர்ட்டா எடுக்குற நடவடிக்கை இது. நம்ம நோக்கம் அதுமட்டுமா இருக்கட்டுமே'' என்றேன்.
""ரஜினி அண்ணனுக்கு நாம ஃபுல் சப்போர்ட் பண்ணுவோம்'' என்றார் விஜிமா.
நிஜமாகவே ரஜினி சாருக்கு தனது முழு ஆதரவை இந்தப் பிரச்சினையில் தந்தார் விஜிமா.
எல்லா சினிமா அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு ரஜினி சாருக்கு ஆதரவான நிலையை எடுத்தோம்.
சிந்தாமணி முருகேசன் அண்ணன் எனக்கு போன் செய்து... ஆதங்கப்பட்டார்.
""அண்ணே... நீங்க ஒரு நடிகருக்கு "ரெட்' போட்டா... நடிகர் சங்கம் எப்படிண்ணே சும்மா இருக்க முடியும்?'' என நான் அவருக்கு பதில் சொன்னேன்.
""விருப்பமுள்ளவர்கள் வந்து வேலை செய்யலாம். திட்டமிட்டபடி "உழைப்பாளி' ஷூட்டிங் நடக்கும். படத்தின் தயாரிப்பாளர் விரும்பினால் நாளையேகூட ஷூட்டிங்கை தொடங்குவோம்'' என முடிவை அறிவித்தேன்.
விஜய வாஹினி ஸ்டுடியோவில் "உழைப்பாளி' பட பூஜை.
இந்தப் பூஜைக்கு பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்... எனக்கு அழைப்பு இல்லை.
வீடு கட்டுவதற்கான சாரம் அமைக்க சவுக்கு மரம் தேவைப்படும். வீடு கட்டி முடிந்ததும்... சவுக்கு மரத்தை எடுத்து வீசிவிட்டு... வாழை மரத்தை கட்டி கிரஹப்பிரவேசம் செய்வார்கள். அதுபோல... "உழைப்பாளி' பிரச்சினையை தீர்த்ததில் நடிகர் சங்கமும், கமல் சாரும், விஜிமாவும், தியாகு, சந்திரசேகர், பாண்டியன், நான், மோகன் காந்திராமன் சார் ஆகியோரும் சவுக்கு மரமாக இருந்தோம். அதனால் எங்களை விட்டுவிட்டு.. வாழைமரமாக இருந்தவர்களை வைத்து பூஜை போட்டிருக்கிறார்கள்.
இந்த பூஜையில் ரஜினி சாரை அமரவைத்து நாணயங்களை அவர்மீது கொட்டி கனகாபிஷேகம் செய்தனர் பி.வாசு சார் இயக்கத்தில் ரஜினி, ரோஜா உட்பட நானும் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி படத்தைத் தயாரித்தார்.
என்னை பூஜைக்கு அழைக்காத காரணத்தை நான் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது தெரிந்துகொள்ள முடிந்தது...
("ரஜினி சார் அரசியலுக்கு வரக்கூடாது' என நான் ஏன் சொல்கிறேன்?)
________________
சின்னமுத்து - நல்ல சொத்து!
நான் தயாரித்த மூன்றாவது படம்... நடிகனாக எனது 175-வது படம் "சின்னமுத்து'. நல்ல லாபத்தையும் தந்த படம். "அண்ணாமலை' டயலாக் ரைட்டர் சண்முகசுந்தரம் அண்ணன் இயக்கினார். ஆனாலும் என் சகோதரன் டைரக்டர் எம்.ஆர்.ஆர்.ரகுவையும், நண்பர் கே.ஆர்.செல்வராஜையும் டைரக்ஷன் இலாகாவில் வைத்துக்கொண்டோம். நடுத்தர வயது, மிடுக்கான முரட்டு மீசை கெட்-அப்பில் நான் நடித்தேன். ரொம்ப ஃபோர்ஸான கேரக்டர். பொதுவாக கோபத்தில் கெட்டவார்த்தை பேசும்போது கூடுதலாக ஒரு ஆவேசம் இருக்கும். அதனால்... இந்த கேரக்டருக்கு வலுச்சேர்க்க... கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசி நடித்தேன். பிறகு அதற்கேற்ப கதைக்கான வசனங்களை எழுதினோம். படப்பிடிப்பு நடந்தபோது... எனக்கு கடும் முதுகுவலி. "சின்னத்தாயி' படத்தின்போது கடுமையான நெஞ்சுவலியிலும் நடித்ததுபோல... இந்தப் படத்திலும் வலியை பொருட்படுத்தாமல் நடித்தேன். படத்தின் வட ஆற்காடு, செங்கற்பட்டு ஏரியாக்களை வாங்கிய ராவ் அவர்களை இப்போதும் நான் நன்றியுடன் நினைக்கிறேன். சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண மண்டப உரிமையாளரின் மகன் சுரேஷ் "சின்னமுத்து'வில் ஹீரோவாக நடித்தார். சுரேஷ் சீரியல்களில் நடித்துவருகிறார். இப்போதும் அவரின் முகம் குழந்தை முகமாகவே இருக்கிறது. சுரேஷின் தாயார் ராஜிஅம்மாள் இன்றளவும் எங்க குடும்பத்தில் ஒருவராகவே நட்பு பாராட்டிவருகிறார்.